search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரகதக்கல் சிலை"

    ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கையில் 350 ஆண்டு பழமையான மரகதக்கல் சிலையை திருட முயற்சி செய்த கும்பலை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். #NatarajarStatue
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கையில் பிரசித்தி பெற்ற மங்கள நாதர் சமேத மங்களேஸ்வரி கோவில் அமைந்து உள்ளது. இங்கு நடராஜருக்கு என உள்ள தனி சன்னதியில் 5ம அடி உயர பச்சை மரகத கல்லால் ஆன நடராஜர் சிலை உள்ளது.

    350 ஆண்டுகள் பழமையான இந்த சிலைக்கு ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்டு வழிபாடு நடத்தப்படும். மார்கழி மாதம் வரும் ஆருத்ரா தரிசன நாளில் மட்டும் சந்தனம் களையப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

    கோவிலில் நேற்று அதிகாலை புகுந்த கொள்ளையர்கள் விலை மதிப்பு மிக்க இந்த சிலையை திருட முயற்சி செய்தனர்.

    அப்போது காவலாளி செல்லமுத்து தடுக்க முயன்றதால் அவரை கொள்ளையர்கள் தலையில் தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    நடராஜர் சன்னதி கதவை உடைக்க முயன்ற போது அலாரம் ஒலித்ததால் கொள்ளையர்கள் திருட்டு முயற்சியை கைவிட்டு தப்பினர்.

    தமிழகம் முழுவதும் திருட்டு போன கோவில் சிலைகளை மீட்டெடுக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் உத்தர கோசமங்கை கோவிலில் நடந்துள்ள இந்த கொள்ளை முயற்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    கோவிலில் சிலைகளை திருட முயன்றது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ் மீனா நேரடி விசாரணை நடத்தினார். மேலும் கொள்ளையர்களை பிடிக்க கீழக்கரை டி.எஸ்.பி. முருகேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட காவலாளி செல்ல முத்துவிடம் விசாரணை நடத்தினர்.

    சிலையை திருட முயன்றது வடநாட்டு கும்பலா? அல்லது உள்ளூரைச் சேர்ந்தவர்களா? என தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கோவிலில் நடந்த இந்த திருட்டு சம்பவம் குறித்து ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #NatarajarStatue
    ×